திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இதன் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், முரசொலி அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டது.
அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க, எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் வழக்கறிஞர் வில்சனும், புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ரவியும் ஆஜரானார்கள்.
இதனைத் தொடர்ந்து, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஜன.10-ம் தேதி தீர்ப்பி அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.