பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்திருந்த நிலையில், விளக்கம் கேட்டு அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது, கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தவர், பின்னர், அழ்கடலில் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார்.
இதன் பிறகு, டெல்லிக்குத் திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் அழகு பற்றியும், தனது பயண அனுபவம் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்பதிவில், லட்சத்தீவின் அமைதியும், அழகும் மனதை மயக்குகிறது.
இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் லட்சத்தீவு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தவர், தான் நடைப்பயிற்சி மேற்கொண்டது, கடற்கரையில் அமர்ந்து ஓய்வெடுத்தது, ஸ்நோர்கெலிங் செய்தது உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, இணையத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக லட்சத்தீவு இடம்பெற்றிருந்தது. இது மாலத்தீவின் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
எனவே, பிரதமர் மோடியை விமர்ச்சித்தும், இந்தியர்களை கேவலமாக விமர்சித்தும் மாலத்தீவை அமைச்சர்கள் 3 பேர் உட்பட பலரும் கேலி, கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாலத்தீவு அமைச்சர்களின் பதிவுக்கு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் துணை சபாநாயகர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்தியாவின் திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராகவும், லட்சத்தீவுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால், மாலத்தீவு புதிய அதிபருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்திருந்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக, மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி இருக்கிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள மாலத்தீவு தூதரான இப்ராகிம் ஷஹிப் விளக்கம் அளிக்குமாறு கூறி, வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது.
இதனிடையே, மாலத்தீவின் புதிய அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சிறுபான்மையின பிரிவுத் தலைவர் அலி அஜிம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “நாம் எம்.பி.க்கள் என்ற முறையில், நாட்டின் வெளியுறவு கொள்கையின் உறுதித்தன்மையை நிலை நிறுத்துவதற்கும், அண்டை நாடு தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
அதிபரை பதவி நீக்கம் செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்களா? அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றச் செயலகம் நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களைப் பற்றி துணை அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கருத்துகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் தொழில் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.