கனமழை காரணமாக புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகக் கடந்த 3 நாட்களாக வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாகப் பல இடங்களில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி, அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், கனமழை காரணமாக கோயிலின் உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளாகினர். கோயிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கோயிலின் முதல் பிரகாரத்தில் தேங்கிய நீரில் நின்றபடி பக்தர்கள் சிலர் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.