லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி கொல்லப்பட்டிருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தவிர, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில், இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர். 3,500 பேர் காயமடைந்தனர். இதனால் நிலைகுலைந்துபோன இஸ்ரேல், பின்னர் சுதாரித்துக் கொண்டு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது.
இஸ்ரேலின் இத்தாக்குதல் இன்றுவரை தொடர்ந்து வரும் நிலையில், லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, இஸ்ரேல் நாட்டின் மீது அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தளபதியான சலே அல் அரூரி கொல்லப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 60 ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை நடத்தியது. அந்த வகையில், சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தளபதி விஸ்ஸாம் அல் டவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்திருக்கிறது.
லெபனான் நாட்டின் தெற்குப் பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா குழுவின் தளபதியாக செயல்பட்டு வந்தவர்தான் விஸ்ஸாம் அல் டவில் என்பது குறிப்பிடத்தக்கது.