ரிஷிகேஷ் அருகே சில்லா பகுதியில் உள்ள கால்வாயில் கார் விழுந்ததில் 2 வனத்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் ராஜாஜி புலிகள் காப்பகத்துக்கின் ஜங்கிள் சஃபாரிக்காக மின்சார ஜீப் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மின்சார வாகன கம்பெனியைச் சேர்ந்த 2 பேர் சோதனை ஓட்டத்துக்காக நேற்று வாகனத்தை கொண்டு வந்திருந்தனர்.
இதையடுத்து, வனத்துறையைத் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 8 பேரும், மின்சார வாகனத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேரும் என 10 பேர், மேற்கண்ட வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்காக நேற்று இரவு எடுத்துச் சென்றனர்.
ரிஷிகேஷில் இருந்து சில்லா நோக்கி வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில், சில்லா பவர்ஹவுஸ் அருகே வந்தபோது திடீரென வாகனத்தின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, சில்லா சக்தி கால்வாயின் தடுப்புச் சுவர் மீதும் மோதிக் கவிழ்ந்தது.
இதையடுத்து, இந்த வாகனத்தின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தைச் சேர்ந்த பயணிகள் விபத்து குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸாரும், பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இவ்விபத்தில் வனத்துறை அதிகாரிகள் ஷைலேஷ் கில்டியால், பிரமோத் தியானி, வாகன ஓட்டுனர் சைஃப் அலிகான், வன ஊழியர் குல்ராஜ் சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த ஷைலேஷ் கில்டியால் பிரதமர் அலுவலக துணைச் செயலாளர் மங்கேஷ் கில்டியாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம், வாகனம் விபத்துக்குள்ளானதில் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரி அலோகி கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல் போய் விட்டார்.
இதையடுத்து, அலோகியை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு, விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.
இந்த நிலையில், விபத்தில் வனத்துறை ஊழியர்கள் உயிரிழந்ததற்கு, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார். “வாகன விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மனவலிமையை அளிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, உத்தரகண்ட் வனத்துறை அமைச்சரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். “2 ரேஞ்சர்கள் உட்பட எங்கள் பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்ததோடு, விலங்குகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை காணவில்லை என்கிற சோகமான சம்பவத்தை நான் அறிந்தேன். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். துயருற்ற குடும்பத்துக்கு அந்தச் சூழலை எதிர்கொள்ளும் தைரியத்தை தரவேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். காணாமல் போன வனத்துறை பணியாளரை மீட்பதற்கான தேடுதல் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.