திரிபுரா மாநிலம் பெட் பகான் பகுதி வழியாக சென்ற லாரி ஒன்றில், 1,630 கிலோ எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திரிபுரா மாநிலம் அசாம் – அகர்தலா தேசிய நெடுஞ்சாலை வழியாக, 14 சக்கர லாரி ஒன்றில் போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் திரிபுரா போலீசார், சி.ஆர்.பி.எப். பட்டாலியன் 140, 28 பட்டாலியன் அசாம் ரைபிள்ஸ், 3-வது பட்டாலியன் டி.எஸ்.ஆர். பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து, பெட் பகான் பகுதியில் சோதனை சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை நடத்தினர். அதில், ஆயிரத்து 630 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூபாய் 1 கோடியே 63 இலட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினார்.
முன்னதாக, கடந்த ஆண்டு, 36 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை தலாய் பகுதியில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, கடந்த 2022-ஆம் ஆண்டு 17 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளையும், 2021-ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.