மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஜனவரி 12-ம் தேதி நடைபெறும் 27-வது தேசிய இளைஞர் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து இளைஞர்களிடையே உரையாற்றுகிறார்.
இந்த ஆண்டு, தேசிய இளைஞர் தினத்தை இளைஞர் நலத் துறையின் அனைத்து அமைப்புகளும் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடவுள்ளன.
நாடு முழுவதும் உள்ள ‘மை பாரத்’ இணையதள தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்) பிரிவுகள், நேரு யுவகேந்திரா (என்.ஒய்.கே.எஸ்) மற்றும் பல கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன், தன்னார்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆற்றல், இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒருங்கிணைக்கப்படும். இந்தக் கொண்டாட்டத்தில் இளைஞர் அமைப்புகள் தங்களது துடிப்பான ஆற்றலை வெளிப்படுத்தும்.
இது உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உறுதி செய்யும். இதில் 88,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வுகளுக்கு தன்னார்வலர்கள் மை பாரத் டிஜிட்டல் தளம் (https://mybharat.gov.in) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் 750 மாவட்டத் தலைநகரங்களில் ஜனவரி 12-ஆம் தேதி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதில் தன்னார்வலர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கிவைக்க உள்ளனர். இந்தத் தன்னார்வலர்கள் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் போக்குவரத்தைக் கையாளவும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணியமர்த்தப்படுவார்கள்.
அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கான கதை சொல்லும் பயிற்சிகளையும், அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் நிகழ்ச்சிகளையும் தன்னார்வலர்கள் நடத்தவுள்ளனர்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டின் இளைஞர்களை ஆதரித்து அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான மற்றும் விரிவான அணுகுமுறையுடன் இளைஞர் நலத் துறை தேசிய இளைஞர் தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.
நாட்டின் 763 மாவட்டங்களில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை சுவாமி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியுடன் தொடங்கும்.
இளைஞர் திருவிழாவின் போது குழுக்கள் மற்றும் தனிநபர்களின் பங்கேற்புடன் மாவட்டத்தின் பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு கலாச்சார நிகழ்ச்சியும் இடம் பெறும்.
போக்குவரத்து விழிப்புணர்வு, ஊட்டச்சத்து மற்றும் உணவு, கதர் மற்றும் கிராமத்தொழில் துறை, புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் போன்றவற்றை மையமாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் மாவட்ட அளவிலான அலுவலகங்களின் சார்பில் நடத்தப்படும்.
இந்த அனைத்து நிகழ்வுகளும் மை பாரத் இணையதளத்தின் மூலம் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டு இளைஞர்களின் வருகை மேம்படுத்தப்படும். இத்தகைய நிகழ்ச்சிகளை அமைப்பது ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான தன்மை மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும்.
இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். அவர்கள் தங்கள் பங்கேற்புக்காக புகைப்படங்கள் மற்றும் தகவல்களை மை பாரத் தளத்தில் பதிவேற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.