புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 9-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முறைப்படி அறிவித்தனா்.
இதையடுத்து, தொழிலாளா்கள் நலத்துறை, போக்குவரத்துத்துறை இணைந்து போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இது தொடா்பாக திங்கள்கிழமை, சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை (ஜன. 9) முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
தலைநகர் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான போக்குவரத்துக் கழகங்களிலும் பயிற்சி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமப்புறங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
போராட்டம் (10-ம் தேதி) 2-வது நாளை எட்டியபோது, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரும் போது, போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டு போராட்டம் நடத்துவதாகவும், இதனால், பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், விழாக்காலத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது.
போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் எப்போதும் சொல்லவில்லை. இந்த போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஏன் பிடிவாதமாக உள்ளீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சினை? என சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.
பேச்சுவார்த்தை முற்று பெறவில்லை என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைக்க உள்ளதாகவும் தமிழக அரசு பதில் தெரிவித்தது.
ஓய்வூதியர்களுக்கு மட்டுமாவது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனால், 11-ம் தேதி முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.