அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
சீதா தேவியால் ‘சிரஞ்சீவி’ என்ற ஆசி பெற்றவர் அனுமன். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது. அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர்.
தமிழ்நாட்டு மற்றும் கேரளாவில் அனுமன் ஜெயந்தி விழா மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில்களுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது.ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இந்த வடைகளை தயாரிக்க 2,250 கிலோ உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்பட்டது.
650 கிலோ நல்ல எண்ணெய், 35 கிலோ மிளகு, சீரகம், உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 32 பேர் வடைகளை தயார் செய்துள்ளனர். கோட்டை சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது