சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் 15-வது முறையாக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.
இதய பாதிப்பு ஏற்படவே ஆபரேசன் செய்யப்பட்டது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6 மாத காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி 7 மாத காலமாக புழல் சிறையில் அடைபட்டுள்ளார். ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.