கொரோனா பாதிப்பு காரணமாக டிசம்பரில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக உலச சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கர்நாடகாவில் புதிதாக 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 974 ஆக உள்ளது.
தமிழகத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 162 ஆக உள்ளது.
ஸ்பெயின் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், இன்று முதல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவின் புதிய திரிபு குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்கக்கூடியது அல்ல என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அரசாங்கங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதுவும் ஓமைக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தடுப்பூசி இன்னமும் செலுத்திக் கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்கள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.