அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் ஆகியோர் டெல்லியில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.