‘தி கோட்’ படப்பிடிப்பு தளத்திற்கு தன்னை காண வந்த தனது ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தனது ரசிகர்களை சந்திக்கும் போது எல்லாம் அவர்களோடு செல்பி எடுப்பார். அந்த செல்பி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும்.
அந்த வகையில் தற்போது அவர் எடுத்த செல்பி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது GOAT என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற இளம் நடிகை நடித்து வருகிறார். இவர் தமிழில் இதற்கு முன்னர் கொலை என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, சினேகா, லைலா, யோகிபாபு, ஜெயராம், மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் நடைபெற்றது.
இந்த சூழலில் சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
தன்னை காண ரசிகர்கள் வந்ததை அறிந்த விஜய், படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது ஏறி ரசிகர்களை சந்தித்து உற்சாகம் கொடுத்தார். தொடர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார்.
அதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வதை விஜய் தனது வழக்கமாக கொண்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து இந்த பாணியை அவர் கடைபிடித்து வருகிறார்.