தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய குழு இன்று மீண்டும் ஆய்வு செய்கிறது.
குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி வெள்ள சேதங்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளம் முழுமையாக வடியாததால் மத்திய குழுவினரால் சேத பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை.
இந்நிலையில், கே.பி.சிங் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் மீண்டும் இன்று தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இரு குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் ஆய்வு செய்கின்றனர்.