வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத, ஊழல் மிகுந்த, திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை தளி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
இங்குள்ள அஞ்செட்டி நூரொந்து சாமி கோவிலில் இளநீரில் தீபம் ஏற்றி வழிபடும் அற்புதம் நடக்கிறது. தளி தொகுதியில் மட்டும் 20,000 ஹெக்டேர் கேழ்வரகு சாகுபடி, 15,000 ஹெக்டேரில் கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் சாகுபடி நடைபெறுகிறது.
தளி, ஓசூர், கெலமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமை குடிலில் ரோஜா சாகுபடி நடைபெறுகிறது. இங்குள்ள பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு பெற தமிழக பாஜக தக்க நடவடிக்கைகளை எடுக்கும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி, நேர்மையான, ஊழலற்ற, திறமையான நல்லாட்சி. பெண்கள், இளைஞர்கள் மேம்பாடுக்காக, பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
நாட்டின் சாலை வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு, பிரதமரின் வீடு திட்டம், வீட்டுக்கு வீடு குழாயில் குடிநீர், கழிப்பறை வசதி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு, விவசாயிகளுக்கு வருடம் 6,000 என இது வரை 30,000 ரூபய, முத்ரா மற்றும் சுவாநிதி என தொழில்முனைவோர்களை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் கடனுதவி என, அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வருகிறார் நமது பிரதமர்.
தளி தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் மீது, கொலைவழக்குகள், கிரானைட் கொள்ளை வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் திராவிட விடுதலைக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் பழனி எனும் பழனிச்சாமி, தளி இராமச்சந்திரனின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்துப் போராடியதால் துப்பாக்கியால் சுட்டும், தலையைத் துண்டித்தும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமச்சந்திரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராமச்சந்திரன் மீதான 100 கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காக இப்பகுதி விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பறித்த குற்றவாளி.
தளி ராமச்சந்திரனும், அவரது ஆட்களும் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது. தனக்கு எதிராக போட்டியிட்ட தனது கட்சி மாவட்டச் செயலாளர் நாகராஜ் ரெட்டியை இரண்டு முறை தளி ராமச்சந்திரனின் ஆட்கள் கொலை வெறியுடன் தாக்கியதால் அவர் நிரந்தர உடல் ஊனமுற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, தளி ராமச்சந்திரன் மீதான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்க பாஜக அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.
திமுக தமிழகம் முழுவதுமே வாரிசு அரசியல் செய்து வருகிறது. எந்தத் தகுதியுமே இல்லாமல், ஒரு குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே பதவிக்கு வருகிறார்கள். திமுகவின் அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் தங்கள் வாரிசுகளை முன்நிறுத்துகிறார்களே தவிர, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை.
இதனால், ஆட்சி நிர்வாகம் வெகுவாக பாதிக்கப்பட்டு, ஊழலும், அராஜகமும் பெருகியிருக்கிறது. தமிழகத்தின் முழு நிர்வாகக் கட்டமைப்பையும் திமுகவின் குடும்ப அரசியல் கெடுத்து விட்டது. ஆனால், முதலமைச்சருக்கு மக்களைக் குறித்துக் கவலை இல்லை. தனது மகனுக்கு அடுத்த கட்டப் பதவி கொடுப்பதில்தான் அவரது முழு கவனம் இருக்கிறது. தமிழக அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.
ஒரு அமைச்சர் புழல் சிறையில் இருக்கிறார். மற்ற அமைச்சர்கள், சிறை செல்லக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அஞ்செட்டி அக்கா-தங்கை ஏரியை மையப்படுத்தி, தொட்டல்லா அணை கட்ட வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாகும். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இந்த திட்டம் தீட்டப்பட்டது.
கடந்த, 1999 – 2000ம் ஆண்டுகளில், தமிழக பொதுப்பணித்துறை தொட்டல்லா அணை கட்ட, 25 கோடி செலவாகும் என திட்ட அறிக்கை தயாரித்தது. இதனை செயல்படுத்தினால் அஞ்செட்டி சுற்றுப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஆனால் ஆனால், இந்த அணை கட்டப் பணம் இல்லை என்று, கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு திட்டத்தை நிறைவேற்றவில்லை. பேனா சிலை அமைக்க, பாராட்டு விழா நடத்த, திரைப்படங்கள் எடுக்க, பெயர் வைப்பதற்காக வீண் கட்டிடங்கள் கட்ட எல்லாம் பணம் வைத்திருக்கும் திமுகவுக்கு, விவசாயிகள் நலனுக்காக அணைகள் கட்டப் பணம் இல்லை. மனதும் இல்லை.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தனித் திறமை வாய்ந்தவர்கள். கடந்த ஒன்பதாண்டு கால ஆட்சியில், ஒரு மத்திய அமைச்சர் மீது கூட ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டு இல்லை. அத்தனை தகுதியான, திறமையான, நேர்மையான நல்லாட்சி, மத்தியில் நடந்து வருகிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத, ஊழல் மிகுந்த, திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். நமது அடுத்த தலைமுறையின் நலனுக்காக, ஊழலற்ற, நல்லாட்சி மத்தியில் தொடர, மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர, தமிழகத்தில் நேர்மையான ஒரு அரசியல் மாற்றம் உருவாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தமிழகமும் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.