என் மண் என் மக்கள் நடைபயணத்தில், மானாமதுரையில் மண் பானை தொழிலாளர்களுடன் அமர்ந்து மண் பானை செய்தது ஆகட்டும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தாத்தா என்னை ஆரத்தழுவி வரவேற்று, மகிழ்ச்சியில், என் தோளில் தொங்கியது என மறக்க முடியாத இனிமையான தருணங்களை, இந்தப் பயணம் கொடுத்துள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் நடைபயணத்தில் 150 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று பொதுமக்களைச் சந்தித்த நிகழ்வு குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும், தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தோடு, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, புண்ணிய பூமி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று பொதுமக்களைச் சந்தித்து, 150 ஆவது தொகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியை அடைந்திருக்கிறோம்.
ராமேஸ்வரத்தில் தொடங்கி, 25வது தொகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி, 50வது தொகுதியாக தேனி மாவட்டம் கம்பம் தொகுதி, 75வது தொகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி, 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி, 125வது தொகுதியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம், 150 ஆவது தொகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என, ஒவ்வொரு தொகுதியிலும், பொதுமக்களின் அன்பும், ஆதரவும், உற்சாக வரவேற்பும் எங்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றால் மிகையாகாது.
கடந்த 150 தொகுதிகளில், எண்ணற்ற நினைவுகளை, நமது என் மண் என் மக்கள் பயணம் கொடுத்துள்ளது. இந்தப் பயணம் மட்டுமல்ல, என்னுடைய அரசியல் பயணம் முழுவதும் என் மண்ணுக்கானது. என் மக்களுக்கானது என்ற உறுதி, மக்களின் பேரன்பால் மேலும் வலுப்பட்டிருக்கிறது.
அனைவரும் எதிர்பார்க்கும் அரசியல்… pic.twitter.com/qN8JKNsWTC
— K.Annamalai (@annamalai_k) January 11, 2024
இந்த நடைபயணம் மூலம், வாழ்க்கையின் பல அற்புதப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். மக்களாட்சி என்பது, மக்களால் ஆனது, மக்களுக்கானது என்பதை வெறும் ஏட்டளவிலேயே தமிழக மக்கள் படிக்கிறார்களே தவிர, இத்தனை ஆண்டு காலமாக, தமிழக அரசியல், தமிழக மக்களுக்கானதாக இல்லை என்பதை உணர முடிந்தது.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல்வேறு கிராமங்களைப் பற்றி அறிய நேர்ந்தது. வேலைவாய்ப்புகள் இன்றி தலைமுறை தலைமுறையாக இளைஞர்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
முன்னேற்றம் என்பது மாவட்டங்களிடையே சமமாக இல்லை. அரசியல் என்பது, சில குடும்பங்களின் அதிகாரப் பசிக்கு இரையாகி, பல தலைமுறைகளாக மக்கள் சுரண்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்ற கோர உண்மை வெளிச்சமாகியிருக்கிறது.
தரமான கல்வி வழங்கப்படவில்லை. தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. உரிமைகளைப் பெற மக்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் தவறுகளைப் பொறுத்துப் போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கேள்வி கேட்கும் தீரமுள்ள தமிழக இளைஞர்கள், இன்று மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அரசியலில் வாரிசுகள் பங்கேற்கலாம். ஆனால் தமிழகத்தில், வாரிசுகள் மட்டுமே அரசியலில் பங்கேற்க முடியும் என்ற நிலைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தங்கள் வாய்ப்புகள் பறிக்கப்படுவது தெரியாமல், பொதுமக்களும், இளைஞர்களும் தகுதியே இல்லாதவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவல நிலை நிலவுகிறது.
மக்கள் விரும்பும் அரசியல் மாற்று, தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக உருவாகாமல் போனது துரதிருஷ்டவசமானது. இத்தனை கடந்தும், தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள், பல ஆண்டுகளாக எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது, இந்த நடைபயணத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் ஆத்மார்த்தமாக உணர முடிந்தது.
மானாமதுரையில் மண் பானை தொழிலாளர்களுடன் அமர்ந்து மண் பானை செய்தது ஆகட்டும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தாத்தா என்னை ஆரத்தழுவி வரவேற்று, மகிழ்ச்சியில், என் தோளில் தொங்கியது என மறக்க முடியாத இனிமையான தருணங்களை, இந்தப் பயணம் கொடுத்துள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி சகோதரர் எனக்காக மலர் கிரீடம் செய்து பரிசளித்ததும், தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் வழங்கிய ஏர் கலப்பை, திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில், எனக்காக புதிய செருப்பு தைத்துப் பரிசளித்த அண்ணன் அக்கா இருவரின் அன்பு என, அனைத்துப் பகுதியிலும் மக்களின் மாசற்ற அன்பைப் பெற முடிந்தது என் பாக்கியம்.
1920ஆம் ஆண்டு, வெள்ளையர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரம் விளைந்த பெருங்காமநல்லூர் மக்களை சந்தித்தது உணர்ச்சிமயமானது. திருச்சியில் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியதும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியதும் என் இளமைக் கால நினைவுகளை மீட்டெடுத்தது.
கடந்த 150 தொகுதிகளில், எண்ணற்ற நினைவுகளை, நமது என் மண் என் மக்கள் பயணம் கொடுத்துள்ளது. இந்தப் பயணம் மட்டுமல்ல, என்னுடைய அரசியல் பயணம் முழுவதும் என் மண்ணுக்கானது.
என் மக்களுக்கானது என்ற உறுதி, மக்களின் பேரன்பால் மேலும் வலுப்பட்டிருக்கிறது. அனைவரும் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் தமிழகத்திலும் இம்முறை ஏற்படும். ஊழலற்ற, நேர்மையான பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க, நம் தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் நிச்சயம் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.