ஒடிசா கடற்கரைக்கு அப்பால் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) இன்று காலை 10.30 மணிக்கு ஒடிசா கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து (ஐ.டி.ஆர்) புதிய தலைமுறை ஆகாஷ் (ஆகாஷ்-என்.ஜி) ஏவுகணையை ஏவி, வெற்றிகரமாக சோதனையை நடத்தியது.
மிகக் குறைந்த உயரத்தில் அதிவேக ஆளில்லா விமான இலக்கைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் போது, ஆயுதமுறை மூலம் இலக்கை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் சீக்கர், லாஞ்சர், மல்டி-ஃபங்ஷன் ரேடார் மற்றும் கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புடன் ஏவுகணையை உள்ளடக்கிய முழுமையான ஆயுதமுறையின் செயல்பாட்டை இது உறுதிப்படுத்தியுள்ளது.
டி.ஆர்.டி.ஓ, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இந்தச் சோதனையைப் பார்வையிட்டனர்.
ஆகாஷ்-என்ஜி அமைப்பு அதிவேக, சுறுசுறுப்பான வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பு ஆகும். வெற்றிகரமான விமான சோதனை பயனர் சோதனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
இந்தச் சோதனைக்காக டிஆர்டிஓ, விமானப்படை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் வெற்றிகரமான வளர்ச்சி நாட்டின் வான் பாதுகாப்புத் திறன்களை மேலும் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
ஆகாஷ்-என்ஜியின் வெற்றிகரமான சோதனையுடன் தொடர்புடைய குழுக்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டி.ஆர்.டி.ஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் வாழ்த்து தெரிவித்தார்.