மும்பையில் 17,8540 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, நாட்டிலேயே மிகவும் நீளமான “அடல் சேது” கடல்வழிப் பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்திருக்கிறார். இப்பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்…
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையையும், நவிமும்பையையும் இணைக்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இப்பாலத்துக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
ஆனால், பாலத்தின் கட்டுமானப் பணிகள், 2018-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த மாதம்தான் நிறைவடைந்தது. இப்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்திருக்கிறார்.
இந்தப் பாலம் உலகிலேயே மிகவும் நீளமான 12-வது பாலமாகும். இப்பாலம் 21.8 கி.மீ. நீளம் கொண்டது. இப்பாலத்தின் கட்டுமான செலவு 17,840 கோடி ரூபாய். “அடல் சேது” பாலம் ஒரு பொறியியல் அதிசயமாகும்.
500 போயிங் விமானங்களின் எடைக்குச் சமமான எஃகு மற்றும் ஈபிள் கோபுரத்தின் எடையை விட 17 மடங்கு அதிக எடை கொண்டது. இதன் கட்டுமானத்தில் 1,77,903 மெட்ரிக் டன் எஃகு மற்றும் 5,04,253 மெட்ரிக் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு கணக்கீட்டின்படி, தினமும் ஏறக்குறைய 70,000 வாகனங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்பாலத்தில் ஒரு வழி பயணம் மேற்கொள்ள 250 ரூபாய் கட்டணம் வசூலிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்திருக்கிறது.
எனினும், குறைக்கப்பட்ட பயண நேரம் மற்றும் தூரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பயணிகளுக்கு எரிபொருள் செலவில் 500 வரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்தப் பாலத்தில் அதிநவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மூடுபனி, குறைந்த பார்வை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளுக்கு அப்பால் இயங்கும் வாகனங்கள் போன்றவற்றைக் கண்டறிய முடியும். அதேபோல, போக்குவரத்து நெரிசலை பராமரிக்க, இரு சக்கர வாகனம், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டிராக்டர்களுக்கு அனுமதி இல்லை.
இப்பாலத்தில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.