அதானி நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த முதல் ‘திருஷ்டி 10 ஸ்டார்லைனர்’ என்ற ஆளில்லா உளவு விமானத்தை கடற்படையிடம் ஒப்படைத்தது.
இந்திய கடற்படையின் உளவுப் பணிக்காக ஆளில்லா கண்காணிப்பு விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம் அதானி டிஃபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் ‘திருஷ்டி 10 ஸ்டார்லைனர்’ என்ற ஆளில்லா உளவு விமானத்தை உள்நாட்டிலேயே தயாரித்தது.
இதன் முதல் விமானம் கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் நடந்தது. விழாவுக்குத் தலைமை வகித்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், ‘திருஷ்டி’ உளவு விமானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தளபதி ஆர்.ஹரிகுமார், “இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம். ஐ.எஸ்.ஆர். தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் மேலாதிக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் தன்னம்பிக்கைக்கான தேடலில் ஒரு மாற்றத்தக்க படியாகும்.
“திருஷ்டி 10-ன் ஒருங்கிணைப்பு நமது கடற்படை திறன்களை மேம்படுத்தும். எப்போதும் உருவாகி வரும் கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைக்கான நமது தயார் நிலையை வலுப்படுத்தும்” என்றார்.
தொடர்ந்தி, நிகழ்ச்சியில் பேசிய இராணுவ விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சூரி, “செயற்கைக்கோள் தகவல்தொடர்பு மூலம் இயக்கப்படும் ட்ரோன்களுக்கான அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய கடற்படை மற்றும் இந்திய இராணுவம் இந்த “திருஷ்டி-10 ட்ரோன்களுக்கு” ஆர்டர் செய்தன.
ஐதராபாத்தில் உள்ள அதானி விண்வெளிப் பூங்கா, புதுமை மற்றும் உள்நாட்டு மயமாக்கலை மையமாகக் கொண்டு உலகத் தரம் வாய்ந்த ட்ரோன்களை உருவாக்கி இருக்கிறது. இது இந்திய புத்திசாலித்தனத்திற்கு சான்றாகும். இந்த தன்னம்பிக்கை தேசத்தின் நம்பிக்கையையும் வலிமையையும் பெரிதும் உயர்த்துகிறது” என்றார்.
இதுகுறித்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், கௌதம் அதானியின் மகனுமான ஜீத் அதானி பேசும்போது, “சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகள், நுண்ணறிவு, தகவல் செயலாக்க திறன், ஆளில்லா கருவிகளின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான தகவல் மற்றும் அறிவாற்றல் திறன்களின் ஒருங்கிணைப்பை வலியுறுத்தியுள்ளன.
இந்திய எல்லைப் பகுதிகளின் உளவு மற்றும் கண்காணிப்புக்கு, அதானி நிறுவனம் இந்திய பாதுகாப்புப் படைகளின் தேவையை நிறைவேற்ற உதவும். மேலும், ஏற்றுமதிக்கான உலக அரங்கில் இந்தியாவை இடம்பெறச் செய்யும். இந்திய கடற்படை மற்றும் அதன் தேவைகளுக்கு சேவை செய்வதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்” என்றார்.
அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ்வன் ஷி பேசுகையில், “திருஷ்டி 10 ஸ்டார்லைனர் ஆளில்லா விமானம் தொடங்கி வைத்திருப்பது, தற்சார்பு மற்றும் உள்நாட்டில் நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்.இந்த நிகழ்வு, ஆளில்லா விமான தொழில்நுட்பத்தில், இந்தியாவின் தற்சார்பை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம்.
இந்திய கடற்படைக்கு குறித்த நேரத்தில் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை விநியோகித்திருப்பது எங்களின் வலுவான தர மேலாண்மை நடவடிக்கைக்கு சான்றாக உள்ளது. இந்த ஆளில்லா விமான தயாரிப்பில் 70 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் தயாரிப்புக்கு உதவ, எங்களுக்கு துணையாக செயல்பட்ட நிறுவனங்களும் கடந்த 10 மாதங்களாக கடுமையாக பணியாற்றி உள்ளன” என்றார்.
இந்த உளவு விமானம் போர்பந்தர் எடுத்துச் செல்லப்பட்டு கடல்சார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த விமானத்தில் நவீன கண்காணிப்பு கருவிகள் உள்ளன. 36 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. 450 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும். அனைத்து கால நிலைகளிலும் வானில் பறக்கும் திறனுள்ளது என்று அதானி ஏரோஸ்பேஸ் மற்றும் டிஃபென்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.