ஒலிம்பிக் தகுதி சுற்றுப் பெண்கள் ஹாக்கிப் போட்டி இன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடங்குகிறது. இன்றையப் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் விளையாடுகிறது.
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. 33வது ஒலிம்பிக் போட்டியானது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுகிறது.
இதில் பெண்கள் ஹாக்கி பிரிவில் மொத்தமாக 12 அணிகள் பங்குபெறவுள்ளன. இதில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சீனா, அர்ஜென்டினா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன.
மீதமுள்ள ஆறு அணிகளில் 2 தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும். இந்த தகுதி சுற்றுப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.
இந்நிலையில் இன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இந்த போட்டியானது தொடங்குகிறது. இன்று முதல் 19ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும். இதனால் இந்திய மகளிர் அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மேலும் இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவுடன் விளையாடுகிறது. 14ஆம் தேதி நியூசிலாந்துடனும், 16ஆம் தேதி இத்தாலியுடனும் விளையாடவுள்ளது.