மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், பணமோசடி செய்தது தொடர்பாக, நிதின் திப்ரேவால், அமித் அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த சௌரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் இணைந்து மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இவர்கள் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.
இந்த செயலி மூலம் மிகப்பெரிய பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்தச் செயலி மூலம் தினமும் 200 கோடி ரூபாய் வரை, இலாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை இலஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.
இதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேலும், மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர்களான சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. இதைத்தொடர்ந்து, இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களான ரவி உப்பால் மற்றும் சௌரப் சந்திரகரை துபாய் போலீசார் கைது செய்தனர். இதை அடுத்து அவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது.
இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், பணமோசடி செய்த புகாரில், மேலும் இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நிதின் திப்ரேவால் மற்றும் அமித் அகர்வால் ஆகியோர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தனர். அவர்களை ஜனவரி 17-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.