அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமாயணம் தொடர்பான நூல்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ராமர் மற்றும் ராமாயணம் தொடர்பான நூல்கள் மற்றும் பொருள்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியது.
இந்து மத நூல்களின் முதன்மை பதிப்பக பிரதிகள் தீர்ந்துவிட்டதால், தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் தெரிவித்துள்ளது.
சுந்தர் காண்ட் மற்றும் ஹனுமான் சாலிசாவுடன் ராம்சரித்மனாஸுக்கான கோரிக்கைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. பிரதிகள் அச்சிடப்பட்டவுடன், அவை உடனடியாக அனுப்பப்படும் என்றும், துளசிதாஸ் எழுதிய ராமாயணப் பிரதிகள் கையிருப்பு இல்லை என்றும் கீதா பிரஸ் உரிமையாளர் திரிபாதி கூறினார்.
ராம்சரித்மனாஸ் என்பது வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட பக்தி கவிஞர் துளசிதாஸால் இயற்றப்பட்ட அவதி மொழியிலான காவியம் ஆகும். பெரும்பாலான மக்களுக்கு சமஸ்கிருதம் தெரியாததால் ராமாயணக் கதையை சாதாரண மக்களுக்கு இது கிடைக்கச் செய்தது.
சுந்தர் காண்டம் ராமாயணத்தின் ஐந்தாவது புத்தகம், இது அனுமனின் கதையைச் சொல்கிறது. ஹனுமான் சாலிசா என்பது ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்திப் பாடல்.
பொதுவாக கீதா பிரஸ் வேதத்தின் 75,000 பிரதிகளை அச்சிடுகிறது, இந்த ஆண்டு அவர்கள் 1 லட்சம் பிரதிகளை வெளியிட்டனர். ஆனால் அனைத்து நூல்களும் விற்று தீர்ந்துவிட்டன. ராம்சரித்மனாஸைத் தவிர, சுந்தர் காண்டம் மற்றும் ஹனுமான் சாலிசாவுக்கும் தேவை அதிகரித்துள்ளது என்றும் திரிபாதி கூறினார்.
ஜெய்ப்பூரில் இருந்து ராம்சரித்மனாஸின் 50,000 பிரதிகள் தேவைப்படுவதாகவும், பகல்பூரில் இருந்து 10,000 பிரதிகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர்களால் ஆர்டர்களை நிறைவேற்ற முடியவில்லை என்றும் லால்மணி திரிபாதி கூறினார். கீதா பிரஸ் தனது இருப்பில் ராம்சரித்மனாஸ் பற்றாக்குறையை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ளது.
ஜனவரி 22-ம் தேதிக்குப் பிறகு அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, ராமர் தொடர்பான நூல்களின் தேவையும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். அயோத்திக்கு மக்கள் வரும்போது, பிரசாதமாக வீட்டிற்கு கொண்டு செல்ல ராமசரித்மனாஸின் நகலை வாங்க விரும்புவார்கள் என்று அவர் கூறினார். அச்சிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அச்சகம் இடப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் திரிபாதி கூறினார்.