கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 9-வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. ராட்சத பலன்களைக் காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகின்றன.
இந்த திருவிழாவின் போது, வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்படும். இந்த ராட்சத பலன்களைக் காணவும், அதில் ஏறி பறக்கவும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள்.
பலூன் திருவிழா நேற்று தொடங்க இருந்த நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 9-வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இதில், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ராட்சத பலூன்களில், வெப்பக்காற்றை நிரப்பி பிரேத்யக பைலட்டுகள் மூலம் வானில் பறக்கவிடப்பட்டன.
அந்த பலூன்களில் பொதுமக்கள் ஏறி பறக்கலாம். சுமார் 500 அடி உயரத்துக்கு இந்த பலூன்கள் பறக்கவிடப்படும். இந்த பலூனில் வானில் பறந்தபடி பொள்ளாச்சி நகரின் அழகிய இயற்கை காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.
பலூன் திருவிழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த திருவிழாவில், இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், இத்திருவிழாவில் மாரத்தான் போட்டியும் நடக்க உள்ளது. இதில், வெற்றி பெறுவோருக்கு பலூனில் இலவசமாக பறக்க அனுமதிக்கப்படுவர். மேலும் சுற்றுலா ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.