40 ஆண்டுகால மகத்தான சேவைக்குப் பின் ஐஎன்எஸ் சீட்டா, குல்தார் மற்றும் கும்பிர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டன.
இந்தியக் கடற்படை கப்பல்களான சீட்டா, குல்தார், கும்பீர் ஆகியவை நாட்டுக்கு 40 ஆண்டுகால மகத்தான சேவையை வழங்கிய பின்னர் 12 ஜனவரி 2024 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டன.
போர்ட்பிளேரில் நடைபெற்ற பாரம்பரிய விழாவில், மூன்று கப்பல்களின் தேசியக் கொடி, கடற்படை சின்னம் மற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்படும் கொடி ஆகியவை சூரிய மறைவின்போது கடைசியாக இறக்கப்பட்டன.
போலந்தின் கிடியா கப்பல் கட்டும் தளத்தில் சீட்டா, குல்தார் மற்றும் கும்பீர் ஆகியவை போல்னோக்னி பிரிவு தரையிறங்கும் கப்பல்களாகக் கட்டப்பட்டன. இவை முறையே 1984, 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் போலந்துக்கான இந்தியத் தூதர்களாக இருந்த திரு எஸ்.கே.அரோரா (சீட்டா மற்றும் குல்தார்) மற்றும் ஏ.கே.தாஸ் (கும்பீர்) முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டன.
இந்த மூன்று கப்பல்களின் கமாண்டிங் அதிகாரிகளாக முறையே கமாண்டர் வி.பி.மிஸ்ரா, லெப்டினன்ட் கமாண்டர் எஸ்.கே.சிங், லெப்டினன்ட் கமாண்டர் ஜே.பானர்ஜி ஆகியோர் இருந்தனர்.
தனது ஆரம்ப ஆண்டுகளில், சீட்டா கொச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த தளத்தில் குறுகிய காலத்திற்கு இருந்தது, கும்பீர் மற்றும் குல்தார் விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்டிருந்தன.
பின்னர் அந்தமான் நிக்கோபார் கமாண்டில் இந்த கப்பல்கள் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன. அங்கு அவை பணியிலிருந்து விடுவிக்கப்படும் வரை சேவை செய்தன. இந்தக் கப்பல்கள் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக கடற்படை சேவையில் இருந்தன, மேலும் 12,300 நாட்களுக்கும் மேலாக கடலில் இருக்கும்போது சுமார் 17 லட்சம் கடல் மைல்களைக் கடந்தன. ராணுவ வீரர்களைக் கரையில் தரையிறக்க 1300 க்கும் மேற்பட்ட கடற்கரை நடவடிக்கைகளை இந்தக் கப்பல்கள் மேற்கொண்டுள்ளன.
இந்தக் கப்பல்கள் தங்கள் புகழ்பெற்ற பயணங்களின் போது, பல கடல்சார் பாதுகாப்பு பணிகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளன.
ஐ.பி.கே.எஃப் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆபரேஷன் அமான், ஆபரேஷன் தாஷா ஆகியவற்றின் போது இவற்றின் பங்கு குறிப்பிடத்தக்கது, மே 1990-ல் இந்தியா மற்றும் இலங்கை எல்லையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையுடனான கூட்டு நடவடிக்கை மற்றும் இலங்கையில் 1997 சூறாவளி மற்றும் 2004 இந்திய பெருங்கடல் சுனாமிக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின.
இந்தியக் கடற்படைக் கப்பல்களான சீட்டா, குல்தார் மற்றும் கும்பீர் ஆகியவை கடல் பரப்பில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளன, மேலும் அவற்றின் பணிவிடுவிப்பு இந்தியக் கடற்படை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது.
ஏர் மார்ஷல் சாஜு பாலகிருஷ்ணன், ஏ.வி.எஸ்.எம், வி.எம், அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்டிங் தளபதி (சின்கான்), வைஸ் அட்மிரல் தருண் சோப்தி, ஏ.வி.எஸ்.எம், வி.எஸ்.எம், கடற்படை துணைத் தலைவர், கொடி அதிகாரிகள், முன்னாள் கமாண்டிங் அதிகாரிகள் மற்றும் மூன்று கப்பல்களின் ஆணையிடும் பணியாளர்கள் போர்ட் பிளேரில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டனர். ஒரே வகுப்பைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் ஒரே நாளில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த நிகழ்வு தனித்துவமானது.