தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். டெல்லியில் இந்தப் பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. டெல்லியில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாக பதிவானது.
பனிமூட்டம் மற்றும் குளிர் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, பஞ்சாப், சண்டிகர் மற்றும் உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர அரியானா, டெல்லி, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காண வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வட மாநிலங்களில் மேலும் சில நாட்களுக்கு கடும் குளிரின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வட மாநிலங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடலை வாட்டி வதைக்கும் கடும் குளிரில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள சாலையோரங்களில் தீ மூட்டி குளிர் காய்கின்றனர். மேலும், சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு, ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் பகல் நேரங்களிலும், முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.