தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன எதிர்ப்பாளரும், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியின் (டி.பி.பி.) வேட்பாளருமான லாய் சிங் டே அபார வெற்றி பெற்றிருக்கிறார்.
கிழக்கு ஆசியாவில் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் தீவு நாடு தைவான். சீனாவுக்கு அருகே அமைந்திருக்கும் இந்நாட்டை சீனா தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் சீனா கூறி வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகபட்ச வயதைக் கடந்து விட்டதால், தற்போதைய அதிபரான சாய் இங் வென் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.
இதையடுத்து, சீன எதிர்ப்பு கட்சியான ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லாய் சிங் டே அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். இவரை எதிர்த்து சீன ஆதரவுபெற்ற தேசியவாத கட்சியின் ஹவ் யொ ஹி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். தைவான் மக்கள் கட்சி கோ வென் ஜி வேட்பாளராக களமிறங்கினார்.
இத்தேர்தலில் சீனவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டே வெற்றிபெற்றார். இவர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இவர், விரைவில் அதிபராக பதவியேற்பார் என்று தெரிகிறது.
தைவான் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், சீன இராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சீன எதிர்ப்பாளர் அதிபராக வெற்றிபெற்றிருப்பது அந்நாட்டை சீற்றத்துக்கு உள்ளாக்கும் என்று தெரிகிறது.
எனினும், சீனாவையும் சீண்டாமல், அமெரிக்காவையும் திருப்திப்படுத்தும் தற்போதைய அதிபர் சாய் இங் வென் சமநிலைக் கொள்கைகளை தொடரப் போவதாக புதிய அதிபராகத் தேர்வாகி இருக்கும் லாய் சிங் டே தெரிவித்திருக்கிறார்.