டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடன் உரையாடிய அனுபவம் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. கடந்த சில நாட்களாக தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் விளம்பரப் பணிகள் நடைபெற்று வந்தது.
ஏற்கனவே டென்னிஸ் தொடரின் ஜாம்பவானான ஃபெடரர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், நடால் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருகிறார்.
இதனால் ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் ஆகியோரை சுற்றியே டென்னிஸ் உலகம் சுழன்று வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரை விளம்பரப்படுத்த ஜோகோவிச், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் உடன் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட்டை விளையாடினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து, ஜோகோவிச்சிடம் விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது ஜோகோவிச் பேசுகையில், விராட் கோலியும் நானும் கடந்த சில ஆண்டுகளாக மெசேஜ் மூலமாக நட்பில் இருந்து வருகிறோம். இதுவரை நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் நட்புடன் இருந்து வருவது பெருமையளிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு வீரராக அவர் சாதனைகள் பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். விராட் கோலியை பற்றி ஜோகோவிச் பேசிய வார்த்தைகள் இந்திய ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் ஜோகோவிச் குறித்து விராட் கோலி பேசுகையில், நான் ஒருமுறை ஜோகோவிச்சின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்த போது, உடனடியாக அவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று தோன்றியது.
அப்போது இன்பாக்ஸ் சென்று பார்த்தேன். ஆச்சரியமளிக்கும் வகையில் அவர் எனக்கு முன்னதாக மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதன்பின் நாங்கள் இருவரும் உரையாடியும், வாழ்த்தும் கூறி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.