இந்திய கிரிக்கெட் அணியின் முண்ணனி வீரரான விராட் கோலிக்கு ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல்12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி முதல் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கான பயிற்சி நடைபெறவுள்ளதால் அவர் கோவிலுக்குச் செல்வாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்தது.
தற்போது அவர் இது குறித்து பிசிசிஐ-யிடம் பேசி இருப்பதாகவும், அதன் படி ஜனவரி 20 அன்று இந்திய அணியுடன் பயிற்சி செய்யும் விராட் கோலி 21ஆம் தேதி மாலை முதல் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் அயோத்தி சென்று அங்கே ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். பிசிசிஐ-யும் கோலி விடுப்பு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.