ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஐதராபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 1265 கிலோ லட்டு தயார் செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஐதராபாத்தைச் சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர், அயோத்தி ராமர் கோவிலுக்குப் பிரசாதம் வழங்குவதற்காக 1265 கிலோ எடையுள்ள லட்டுவை தயாரித்துள்ளார்.
இந்த லட்டு ஜனவரி இன்று குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டியில் அயோத்திக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லட்டு தயாரிக்க சுமார் 30 பேர் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்ததாக நாகபூஷன் ரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், ” 2000 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீ ராம் கேட்டரிங் என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் வைத்திருக்கிறேன். ராமர் ஜென்மபூமி கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு , ஸ்ரீராமருக்கு என்ன பிரசாதம் கொடுக்கலாம் என்று மனதிற்குள் யோசித்தோம். பிறகு, இந்த யோசனை வந்தது ” என்று கூறினார்.