வைரத்தால் ஆன 2.5 கிலோ எடையுள்ள ராமர் கோயில் மாதிரியை வாரணாசியைச் சேர்ந்த கைவினை கலைஞர் குஞ்ச் பிகாரி வடிவமைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்த நிலையில், வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாதிரியைக் கைவினை கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
வாரணாசியைச் சேர்ந்த கைவினை கலைஞர் குஞ்ச் பிகாரி, ராமர் கோயில் மாதிரியை வடிவமைத்துள்ளார். இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2.5 கிலோ எடையுள்ள ராமர் கோயில் மாதிரியை வடிவமைக்க அந்த கைவினை கலைஞர் 108 நாள்கள் எடுத்துக் கொண்டுள்ளார். வைரத்தைத் தவிர்த்து தங்கம், வெள்ளி ஆகியவற்றைப் பயன்படுத்தி கோயில் மாதிரி செய்யப்பட்டுள்ளது.
12 அங்குலம் உயரம், 8 அங்குலம் அகலம், 12 அங்குலம் நீளத்தில் கோயில் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராமர் மீதான அன்பின் காரணமாகவும் பக்தியின் அடையாளமாகவும் கோயில் மாதிரியைச் செய்தேன் என்று இந்த கைவினை கலைஞர் குஞ்ச் பிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” குலாபி மீனாகரி கைவினை கலையைப் பயன்படுத்தி இந்த கோயில் மாதிரியை வடிவமைத்தேன். குலாபி மீனாகரி கலையை பயன்படுத்தி ராமர் கோயிலை வடிவமைத்தது இதுவே முதல்முறை.
இந்த கலைப்படைப்பை உருவாக்க 108 நாட்கள் ஆனது. தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி இதைச் செய்துள்ளேன். கோயிலின் மாதிரியில் ராம் லல்லாவின் தங்கச் சிலையும் உள்ளது.
ராமர் கோயில் மாதிரியைச் செய்ய நான் மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் சரியாகப் போகவில்லை. ஆனால், இந்த முறை ராமரின் ஆசீர்வாதத்தால் செய்துள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் முயற்சியால்தான் குலாபி மீனாகரி கலைப் படைப்பு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.
வாரணாசி கைவினை கலைஞர்களின் தனித்துவமான திறன்களை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் குலாபி மீனாகரியின் நேர்த்தியான கலைப்படைப்புகளைப் பிரதமரும் உத்தரப் பிரதேச முதலமைச்சரும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு அடிக்கடி பரிசுகளாக வழங்குவார்கள்” என்று கூறினார்.