இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அன்றைய தினம் நண்பகல்12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தோனியின் ராஞ்சி இல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை மாகாண செயலாளர் தனஞ்சய் சிங், அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி உள்ளார். அப்போது பாஜகவின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கர்மவீர் சிங்கும் உடனிருந்தார்.
முன்னதாக, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு ராமர் கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.