அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமாயணம் தொடர்பான நூல்களை இணையத்தில் இலவசமாகப் படிக்கப் பிரபல வெளியீட்டாளர் கீதா பிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ராமர் மற்றும் ராமாயணம் தொடர்பான நூல்கள் மற்றும் பொருள்கள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்து மத நூல்களின் முதன்மை பதிப்பக பிரதிகள் தீர்ந்துவிட்டதால், தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது கீதா பிரஸ் நிறுவனம் ராமாயணம் தொடர்பான புத்தகங்களை gitapress.org என்ற அதன் இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த புத்தகங்கள் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, ஒரியா, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பங்களா, நேபாளி மற்றும் அஸ்ஸாமி உள்ளிட்ட 10 மொழிகளில் இலவசமாகப் படிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதுகுறித்து பேசிய கீதா பிரஸ் உரிமையாளர் திரிபாதி கூறியதாவது, ” பொதுவாக கீதா பிரஸ் வேதத்தின் 75,000 பிரதிகளை அச்சிடுகிறது, இந்த ஆண்டு அவர்கள் 1 லட்சம் பிரதிகளை வெளியிட்டனர். ஆனால் அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ராம்சரித்மனாஸைத் தவிர, சுந்தர் காண்டம் மற்றும் ஹனுமான் சாலிசாவுக்கும் தேவை அதிகரித்துள்ளது ” என்று கூறினார்.
ஜெய்ப்பூரிலிருந்து ராம்சரித்மனாஸின் 50,000 பிரதிகள் தேவைப்படுவதாகவும், பகல்பூரில் இருந்து 10,000 பிரதிகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர்களால் ஆர்டர்களை நிறைவேற்ற முடியவில்லை என்றும் லால்மணி திரிபாதி கூறினார்.
கீதா பிரஸ் தனது இருப்பில் ராம்சரித்மனாஸ் பற்றாக்குறையை எதிர்கொள்வது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளது.