இந்தியாவின் இளம் வீரர், தமிழகத்தின் தங்கமகன் பிரக்ஞானந்தா ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரன் விளையாடினார் .
இப்போட்டியில் பிரக்ஞானந்தா 62 நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரனை வீழ்த்தினார் . இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 2,748 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 2,748.3 புள்ளிகளுடனும் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதோடு, தொடர்ந்து சாதனை படைத்துவருகிறார்.
2023ம் ஆண்டில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளம் செஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு இறுதிப் போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
அதேபோல், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். நெதர்லாந்து போட்டியில் தற்போது பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார். இவர் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.