கடந்த காலாண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில், உயர்கல்விக்காக கனடா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 86% குறைவு கண்டுள்ளது.
கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான இராஜதந்திர மோதல் காரணமாக, இந்திய மாணவர்களுக்கு கனடா வழங்கிய கல்விக்கான அனுமதியின் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளது.
இது குறித்து ஒரு நேர்காணலில் பேசிய கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், இந்தியர்களின் கல்விக்கான அனுமதிகளின் எண்ணிக்கை விரைவில் மீண்டு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைக்கப்பட்டன. இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளது.
இந்திய-கனடா மோதல்களை தொடர்ந்து, இந்தியாவில் இருந்த கனட அதிகாரிகளும், கனடாவில் இருந்த இந்திய அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை, கனடா, இந்தியர்களுக்கான விசா சேவையையும் நிறுத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய மாணவர்களுக்கு கனடா வழங்கிய கல்விக்கான அனுமதியின் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கனடா இந்தியர்கர்களுக்கு வழங்கிய கல்விக்கான அனுமதி 86% வீழ்ச்சியடைந்துள்ளது.
அதாவது, 2022ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியர்களுக்கு 108,940 கல்விக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2023ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியர்களுக்கு 14,910 கல்விக்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.