சென்னையில் நாளை மறுநாள், அதாவது 19-ம் தேதி நடைபெற உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.
நாடு முழுவதும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வரும் 19-ம் தேதி அன்று முதல் தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 என்ற தலைப்பில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதன் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
விழாவில், பாரதப் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்க உள்ளார். மேலும், சிறப்புரையாற்ற உள்ளார். இதையொட்டி, கடந்த மாதம் சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் இலச்சினை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
பாரதப் பிரதமர் மோடி வருகையொட்டி, பாஜக சார்பில் மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க உள்ளனர்.