பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகையாகத் தொடங்கியது. 15-ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16-ம் தேதி மாட்டுப் பொங்கலும் நடைபெற்றது. இன்று காணும் பொங்கல் விழா நடைபெற்றது.
காணும் பொங்கலையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மையங்களில் பொது மக்கள் காலை முதலே குவிந்தனர். வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அதேபோல, தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா மையமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உதகை தாவிரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், படுகர் மற்றும் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் இசைக்கு ஏற்பட நடனம் ஆடி கொண்டாடினர்.
இதனைத்தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்கான உறியடி போட்டி, சாக்கு போட்டி, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
இதேபோல, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்தனர். குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.
இதபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் விழா களைகட்டியது.