சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது சிராவயல். இங்கு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டி மிகப் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும், வழக்கம் போல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது. அந்த வகையில், 271 காளைகள் பதிவு செய்யப்பட்டன. 81 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்.
அவ்வாறு, பதிவு செய்யப்பட்ட காளைகள், வாடிவாசலுக்குக் கொண்டு வரப்பட்டது. போட்டி ஆரம்பம் ஆனதும், வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது, பதிவு செய்யப்பட்ட 81 மாடுபிடி வீரர்கள் பல்வேறு சுற்றுகளாகச் சீறி வந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயற்சி செய்தனர். இதில், காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
சிராவயல் புதுாரில் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொட்டலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 -க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியைக் காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
மஞ்சுவிரட்டுப் பாதுகாப்புப் பணியில் 800 போலீசார் ஈடுபட்டனர். இதில், மாடு முட்டியதில் வளையட்டியச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 12) என்ற சிறுவன் உயிரிழந்தார். மேலும், 35 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.