அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள பகவான் பால ராமரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது.
அயோத்தி ராமர் கோவிலில் கருவறைக்குள் வைப்பதற்காகக் கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகி வடிவமைத்த 200 கிலோ எடையிலான பால ராமர் சிலை, லாரி மூலம் நேற்று முன் தினம் இரவு அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டது.
நேற்று காலை அந்த சிலை கிரேன் மூலம் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் ஒலிக்கப்பட்டன. ராமர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.
இதனிடையே, கருவறைக்குள் வைக்கப்பட்ட பல ராமரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. 51 இன்ச் கொண்ட சிலையின் முகம் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.
ஜனவரி 22-ம் தேதி பல ராமரின் சிலைக்குப் பூஜை செய்யப்பட்டு, குழந்தை ராமர் சிலையின் கண் திறக்கப்படும்.
காலை பூஜை முடிந்த பின்னர், மதியம் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது.
அதன் பிறகு கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்படும். இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவ சிலையைத் தரிசிக்கப் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.