ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் ஹாக்கி தகுதி சுற்று போட்டியில் இந்திய பெண்கள் அணி அரையிறுதியில் தோல்வியடைந்துள்ளது.
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. 33வது ஒலிம்பிக் போட்டியானது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுகிறது.
இதில் பெண்கள் ஹாக்கி பிரிவில் மொத்தமாக 12 அணிகள் பங்குபெறவுள்ளன. இதில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சீனா, அர்ஜென்டினா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.
மீதமுள்ள ஆறு அணிகளில் 2 தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும். இந்த தகுதி சுற்றுப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஜெர்மனி, ஜப்பான் (ஏ பிரிவு), அமெரிக்கா, இந்தியா (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி வாய்ப்பை இழந்த நியூசிலாந்து, செக்குடியரசு, சிலி, இத்தாலி அணிகள் 5 முதல் 8 இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் விளையாடுகின்றன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – ஜெர்மனி அணிகள் விளையாடியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 15-வது நிமிடத்தில் இந்திய அணி வீராங்கனை தீபிகா ஒரு கோல் அடிக்க, அதற்கு பதிலடியாக ஜெர்மனி வீராங்கனை ஸ்டேபன்ஹார்ஸ்ட் சார்லோட் ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து அதிரடியாக நடைபெற்ற ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் ஸ்டேபன்ஹார்ஸ்ட் சார்லோட் ஒரு கோல் அடித்து ஜெர்மனியை முன்னிலை பெறச் செய்தார்.
அதற்கு பதிலடியாக இந்திய அணியின் இஷிகா ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் கோல் அடிக்க போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலையில் இருந்தது.
இதனையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய அணி 4 – 3 என்ற கோல்கணக்கில் ஜெர்மனியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன்படி ஜெர்மனி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதைத் தொடர்ந்து இன்று 3-வது இடத்துக்கான போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி, ஜப்பான் அணியுடன் விளையாடவுள்ளது.