இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, காலியான இடங்களை இந்துக்கள் கைப்பற்றுவதாக பாகிஸ்தான் வானொலியில் செய்தி வெளியானது. இதையடுத்து, 1949-ம் ஆண்டு இராம் லல்லா சிலையை அகற்றுமாறு உத்தரப் பிரதேச மாநில அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தியது என்று முன்னாள் மத்திய கலாச்சாரச் செயலாளர் ராகவேந்திர சிங் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கின்றன.
எனினும், இக்கோவில் அமைவதற்காக இந்துக்கள் எவ்வளவு போராட்டங்களை சந்தித்திருக்கிறார்கள் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன. அந்த வகையில், 1949-ம் நிகழ்ந்த சம்பவம் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்…
இதுகுறித்து முன்னாள் மத்திய கலாச்சாரச் செயலாளரும், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் முன்னாள் இயக்குநருமான (தற்போது பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்) ராகவேந்திர சிங் கூறுகையில், “1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23-ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து இராம் லல்லா சிலை தோன்றியது.
இத்தகவல் நாடு முழுவதும் தீயாகப் பரவியது. இந்த சமயத்தில், பாகிஸ்தான் வானொலியில் ஒலிபரப்பப்பட்டதாக ஒரு செய்தி உலா வந்தது. அதாவது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இஸ்லாமிய சமூகத்தினரால் காலி செய்யப்பட்ட இடங்களை இந்துக்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக செய்தி ஒலிபரப்பாகி இருக்கிறது.
இந்த விஷயம் மத்திய அரசுக்குத் தெரியவவே, இராம் லல்லா சிலையை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரப் பிரதேச மாநில அரசிடம் மத்திய காங்கிரஸ் அரசு வலியுறுத்தியது. அப்போது, உ.பி. முதல்வராக கோவிந்த் பல்லப் பந்த் இருந்தார். அவரும் இராம் லல்லா சிலையை அகற்றுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த சமயத்தில், பைசாபாத் மாவட்ட கலெக்டராக இருந்தவர் எனது தாத்தா குரு தத் சிங். இவர், இராம் லல்லா சிலையை அகற்றுவதால் ஏற்படும் பிரச்சனை குறித்து மாநில அரசுக்கு அறிக்கை அளித்தார். அதில், இராம் லல்லா சிலையை அகற்றுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
இது எனது தாத்தாவுக்கு எதிராகத் திரும்பியது. இந்த விஷயம் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு மத்திய அரசிடமிருந்து சில வழிகாட்டுதல்கள் வந்தன. அதனடிப்படையில், உ.பி. முதல்வர் கோவிந்த் பல்லப் பந்த், மாவட்டத் தலைநகரமாக பைசாபாத்துக்குச் சென்றார்.
அரசு நெறிமுறைகளின்படி, மாநில முதல்வர் வரும்போது, அரசு அதிகாரிகள் மாவட்ட எல்லையில் சென்று அவரை வரவேற்க வேண்டும். ஆனால், எனது தாத்தாவோ மாவட்ட எல்லைக்குச் சென்று அவரை அழைத்து வருவது சாத்தியமில்லை என்று தெரிவித்து விட்டார்.
ஏனெனில், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை பின்பற்றி இராம் லல்லா சிலையை அங்கிருந்து அகற்றினால் பெரும் கலவரம் வெடிக்கும். அப்போது, மாநில முதல்வர் அங்கிருப்பது உசிதமல்ல என்று தெரிவித்து விட்டார். எனினும், முதல்வர் பந்த், தனது உத்தரவை நிறைவேற்றும்படி எனது தாத்தாவிடம் வலியுறுத்தினார்.
அதோடு, தனது உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் பின்விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், எனது தாத்தா தனது முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார். இதனால், முதல்வர் பந்த் தனது தலைமை இடத்துக்கே திரும்பிச் சென்றார்.
இதன் பிறகு எனது தாத்தா ராஜினாமா முடிவை எடுத்தார். அதற்கு முன்பாக, அவர் 2 உத்தரவுகளை பிறப்பித்தார். முதலாவதாக, இராம் லல்லா சிலை இருந்த கர்ப்பகிரஹம் அதே இடத்தில் இருக்க வேண்டும். அந்த இராம் சபூதராவில் பூஜை மற்றும் அர்ச்சனை தொடர்ந்து நடக்க வேண்டும்.
இரண்டாவதாக, மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இவை இரண்டுமே அமல்படுத்தப்பட்டன. இதன் பிறகு, எனது தாத்தா ராஜினாமா செய்தார். ஆனால், எனது தாத்தாவின் அரசு இல்லத்திலிருந்து பொருட்கள் எல்லாம் நள்ளிரவில் அகற்றப்பட்டு சாலையில் போடப்பட்டன.
அன்று இரவு முழுவதும் எனது தாத்தா தனது குடும்பத்துடன் சாலையில் கழித்தார். அதன் பிறகு, அவர் தனது நண்பர்களில் ஒருவரான பகவதி பாபுவின் குடியிருப்புக்கு மாறினார். தொடர்ந்து, எனது தாத்தாவின் ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது. அது அவரது முடிவுக்குக் கிடைத்த பரிசு.
ஆனாலும், இன்று இச்சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்போது, அன்று எனது தாத்தா எடுத்தது மிகவும் துணிச்சலான முடிவு என்று நினைக்கிறேன். இந்த சம்பவங்கள் எல்லாம் அந்தப் பகுதி மக்களுக்கு நன்கு தெரியும்” என்று கூறியிருக்கிறார்.