நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்து சீட்டு எழுதிக் கொடுக்கும் போது, அதில், ஆன்டிபயாட்டிக் மருந்து எதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது மக்களுக்குப் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அதனைக் குணப்படுத்த, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது, உடலில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகள் மருந்துகளின் செயல் திறனை முறியடிக்கின்றன.
இதனால், அந்த கிருமிகள் உடலில் இருந்து அழியாமல், மேலும் வளர்ச்சி அடைகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, உடலில் உள்ள பாக்டீரியாக்கள் வலிமை பெறுகின்றன.
அப்போது, ஏ.எம்.ஆர் என்ற நுண்ணியிர் எதிர்ப்பு குறைபாடு ஏற்படுவதால் அது மனித உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்துசீட்டு எழுதிக் கொடுக்கும் போது, அதில், ஆன்டிபயாட்டிக் மருந்து எதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவச் சங்கங்கள், மருந்தகச் சங்கங்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதாரச் சேவைகளுக்கான இயக்குநரகம் இது தொடர்பாக விரிவாக கடிதம் அனுப்பியுள்ளது.