காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, ஜன. 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.
இதையடுத்து, தொழிலாளா் நலத் துறை, போக்குவரத்துத் துறை இணைந்து போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வு, ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்குப் பணப் பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்சினைகளை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.
ஆனால், இதனை அரசத்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடா்பாகச் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, ஜன. 9 -ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் தொடங்கின.
தொழிலாளா்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் பயிற்சி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்குத் தொழிற்சங்கத்தினர் கடும எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இதற்கிடையே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், போராட்டத்தைத் தள்ளிவைக்க நீதிபதி கேட்டுக் கொண்டார். அதன்பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்துக் கழகம், தொழிலாளர் நலத்துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, நீதிமன்ற வழிகாட்டுதல்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை பிப்.7 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.