சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் பங்கு விளையாடிய கிரிக்கெட் போட்டியில் சச்சின் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் யுவராஜ் அணி தோற்கடித்தது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் பங்கு பெற்ற ஒன் வேர்ல்டு – ஒன் பேமிலி கண்காட்சி கிரிக்கெட் போட்டி கர்நாடகாவில் நேற்று நடைபெற்றது.
கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் மொத்தம் 24 ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்றனர். இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையில் ஒரு அணியும் களமிறங்கியது.
இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒன் வேர்ல்டு அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஒன் பேமிலி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்தது.
டேரன் மேடி அரைசதமடித்து 51 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் யுவராஜ் சிங் தனது பாணியில் அதிரடி காட்டி 23 ரன்கள் எடுத்தார்.
சச்சின் அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்பி சிங், அசோக் டின்டா, மாண்டி பனேசர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சச்சின் அணி 19.5 வது ஓவரில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் 27 ரன்கள் எடுத்து முரளிதரன் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். தென் ஆப்பரிக்காவின் ஆல்விரோ பீட்டர்சன் சிறப்பாக பேட் செய்து அரை சதத்தை பூர்த்தி செய்து 74 ரன்கள் அடித்தார்.
கடைசி நேரத்தில் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட் செய்த இர்பான் பதான் சிக்ஸரை பறக்கவிட்டு அணியை வெற்றி பெற செய்தார்.
யுவராஜ் அணியில் அதிகபட்சமாக சமிந்த வாஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜேசன் கிரெஜா விக்கெட்களும், மகாயாந்தினி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் சச்சின் அணி 4 விக்ஸ்ட்கள் வித்தியாசத்தில் யுவராஜ் அணியை தோற்கடித்தது.