அயோத்தி இராமர் கோவிலில் வரும் 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில், அதற்கான நான்காவது நாள் சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது. இராமர் கோவிலில் வரும் 23-ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் பிராண பிரதிஷ்டை வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அயோத்தி இராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை செய்வதற்கான, சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இந்த சிறப்பு பூஜைகள் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நான்காவது நாளான இன்று காலை நவகிரக பூஜைகள் நடத்தப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை அயோத்தி இராமர் கோவில் கருவறையில், குழந்தை இராமர் திருமேனி வைக்கப்பட்டது. இதனை அடுத்து குழந்தை இராமர் திருமேனிக்கு, அஷ்ட மூலிகை பந்தனம், சந்தனக் காப்பு, திவ்விய சாந்து சார்த்தி நறுமணம் மிக்க புது மலர்களால் அலங்காரம் செய்தனர்.
நான்காவது நாள் பூஜைகளுக்கு பின், இராமர் கோவில் கருவறை கதவுகள் அடைக்கப்பட்டது. 23-ஆம் தேதி முதல் இராமர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இராமர் கோவில் விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இதற்கிடையே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராமர் கோவில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்பதற்காக, பாரத பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விரதங்களைப் பின்பற்றி வருகிறார்.