மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்பிலான, 628 கிராம் எடை கொண்ட கொக்கேய்ன் போதைப்பொருளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருவதும், இதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, அதிரடியாக பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, வெனீசுலாவிலிருந்து வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அவரிடம் 628 கிராம் எடைக்கொண்ட கொக்கேய்ன் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து, அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 628 கிராம் எடை கொண்ட கொக்கேய்ன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 6 கோடியே 20 இலட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போதைப்பொருளை கடத்தி வந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.