அயோத்தி இராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தலா 25 கிராம் எடை கொண்ட 1 லட்சம் லட்டுகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில் வருகிற 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த விழாவில், நாடு முழுவதிலுமிருந்து 7 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் அயோத்தி இராமர் கோவிலுக்கு சிறப்புப் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அயோத்தி இராமர் கோவில் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக, தலா 25 கிராம் எடை கொண்ட 1 லட்சம் லட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, நேற்று மாலை சிறப்பு சரக்கு விமானம் மூலம் அயோத்தி இராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.