இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் 72-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் கலந்துகொண்டு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 51,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “நாடு அமிர்த காலத்தின் பாதையில் செல்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதற்கான வீரர்கள் இன்றைய மாணவர்கள்.
மாறிவரும் காலத்திற்கேற்ப, தொழில்நுட்பங்களின் நேர்மறையான அம்சங்களை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் கல்வி நிறுவனங்களைக் கையாள்வதற்கு இதுவே சரியான தருணம். இந்த அமிர்த காலத்தை மாணவர்கள் கர்தவ்ய காலமாக்கி, தங்களது துறையில் சிறந்து விளங்க வேண்டும்” என்றார்.