பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே தோட்டத்தில் இருந்து ஏகே-47 துப்பாக்கி, 2 மெகசின்கள், 40 தோட்டாக்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) கைப்பற்றி இருக்கிறது.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் பறந்து சென்றது. இதனால் சந்தேகமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள தோட்டத்தில் இருந்து 1 ஏகே-47 ரக துப்பாக்கி, 2 மெகசின்கள் மற்றும் 40 தோட்டாக்களை எல்லைப் பாதுகாப்புப் படை கைப்பற்றியது.
மேலும், துப்பாக்கிக்கு நடுவில் வெள்ளை நிறத்தில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலமும் மீட்கப்பட்டது. அதில் 40,000 ரூபாய் ரொக்கம் இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரு நாள் முன்னதாக, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், பெரோஸ்பூரில் 3 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.