ராய்பூரில் உள்ள இந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தின விழாவில் கலந்து கொண்ட துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், விவசாய மாணவர்களின் பங்கு ராணுவ வீரருக்கு நிகரானது என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் உள்ள இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகத்தின் நிறுவன தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில ஆளுநர் விஸ்வபூஷன் ஹரிசந்தன் தலைமை தாங்கினார். மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், விவசாயத்துறை அமைச்சர் ராம் விசார் நேதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட புதிய இம்யூனோபூஸ்டர் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நெல் வகையான ‘சஞ்சீவனி’ மூலம் தயாரிக்கப்பட்ட சஞ்சீவனி உடனடி, சஞ்சீவனி மது கல்க் மற்றும் சஞ்சீவனி ரைஸ் பார் ஆகிய 3 தயாரிப்புகளையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஜெக்தீப் தன்கர், “விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், வரும் தலைமுறையினருக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைய முடியும்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு விவசாய மாணவர்களின் பங்கு இராணுவ வீரருக்கு நிகரானது. வேளாண் மாணவர்கள் மதிப்பு கூட்டல் மற்றும் வேளாண் விளைபொருட்களை சிறப்பாக சந்தைப்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.