சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும், 47-வது புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
சென்னையில் ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, வாசகர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பது, சென்னை புத்தகக் கண்காட்சிக்காக தான்.
இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி கடந்த 3-ஆம் தேதி, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, விரும்பிப் படிக்கும் சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய – இலக்கண நூல்கள், வாழ்க்கை வரலாறு, கவிதைகள் தொடர்பான புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்கள் இருந்தன.
சென்னையில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புத்தகக் கண்காட்சி என்பதால், சென்னை மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இந்நிலையில், இன்றுடன் புத்தகக் கண்காட்சி நிறைவு பெறுகிறது. இதன் பிறகு தான் விற்பனையான புத்தகங்களின் எண்ணிக்கையும், புத்தகக் கண்காட்சிக்கு வந்த மக்களின் எண்ணிக்கையும் தெரிய வரும்.